டெல்லியில் 10 ஆயிரம் படுக்கை வசதிகளை கொண்ட, தற்காலிக கொரோனா மருத்துவமனை 4 நாட்களில் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

தேசிய அளவிலில் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், தலைநகர் டெல்லியிலும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பெருகி கட்டுக்கடங்காமல் உள்ளது.
மேலும், கொரோனா பாதிப்புகளால் மருத்துவமனைகளில் இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, 10 ஆயிரம் படுக்கைகளுடன் சர்தார் படேல் எனும் பெயரில் மிகப்பெரிய தற்காலிக மருத்துவமனை செயல்பாட்டுக்கு வர உள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு லேசான மற்றும் மிதமான பாதிப்பு உள்ளவர்கள் முதற்கொண்டு, ஆக்சிஜன் வெண்டிலேட்டர் போன்ற சாதனங்களை கொண்டு தீவிர சிகிச்சை தேவைப்படுவோருக்கும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை வழங்க முடியும். 875 மருத்துவர்கள் அவர்களுக்கு உதவ தலா ஒரு செவிலியர்மற்றும் மருத்துவமனை ஊழியர்களையும் நியமனம் செய்ய டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. ஒரு மருத்துவமனைக்கு 500 படுக்கைகள் என, 20 சிறு மருத்துவமனைகளை போல இவை செயல்பட உள்ளன. 18 ஆயிரம் டன் திறன் கொண்ட ஏசி வசதி அங்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இன்னும் 4 நாட்களில் திறக்கப்பட உள்ள இந்த மருத்துவமனையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமித் ஷா தமது ட்விட்டர் பக்கத்தில், மருத்துவமனையை இயக்க உள்ள இந்தோ திபெத் எல்லை காவல்படைக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு பேரிடர் காலத்தில் நாட்டு மக்களுக்கு எல்லாவகையான மருத்துவ வசதிகளையும் செய்து தர தயாராக இருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.