கடந்த வாரம் சி.ஆர்.பி.எஃப் வீரரையும், 6 வயது சிறுவனையும் கொன்ற தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாகில் கடந்த வாரம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் மற்றும் 6 வயது குழந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர். சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த தீவிரவாதி ஒருவர் நடத்திய தாக்குதல் பல்வேறு தரப்பினரின் கோபத்தையும், கண்டனத்தையும் எழுப்பியது. இதனையடுத்து இந்த தாக்குதல் நடத்திய, ஜம்மு காஷ்மீர் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஸாகீத் தாஸ் என்ற தீவிரவாதியின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர்.
பின்னர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், ஸாகீத் தாஸ் உள்ளிட்ட 2 தீவிரவாதிகளை கடந்த செவ்வாய்க்கிழமை சுற்றி வளைத்தனர். எனினும் அதில் ஸாகீத் தப்பியோடிய நிலையில், மற்ற இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் நேற்றிரவு ஸ்ரீநகரின் மல்பர்க் பகுதியில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு காவல்படையினர் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் கடந்த செவ்வாயன்று காவல்துறையினரிடம் இருந்து தப்பிய ஸாகீத் தாஸ் என்ற தீவிரவாதி கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காஷ்மீர் போலீஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “ அனந்த்நாகில் சிஆர்பிஎஃப் வீரர் மற்றும் 6 வயது குழந்தையை கொன்ற தீவிரவாதி ஸாகீத் தாஸ் நேற்று ஸ்ரீநகர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது ஜம்மு காஷ்மீர் காவல்துறையினருக்கும், சிஆர்பிஎஃப் படைகளுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நடைபெற்ற வெவ்வேறு என்கவுண்டர்களில் இதுவரை 48 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.