முதலவர் பழனிச்சாமி மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடுக்கப்பட்ட நெடுஞ்சாலை டெண்டர் ஊழல் வழக்கில் அடிப்படை காரணங்கள் இல்லாததால் வழக்கை வாபஸ் பெறுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில் சாலை விரிவாக்கத்துக்கான டெண்டரில் 1,165 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஊழல் நடந்திருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
எப்போதும் ஆண்டுதோறும் கோரப்படும் டெண்டர் தற்போது 5 ஆண்டுகளுக்கு கோரப்பட்டுள்ளது எனவும் இதானால் அதிக செலவு ஏற்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடபட்டிருந்தது. மேலும் ஊரடங்கால் பலரும் தகுந்த ஆவணங்களை சமர்பிக்க முடியாத சூழலில் முதல்வர் தனக்கு தெரிந்தவர்களுக்கு டெண்டர் கொடுத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையிலும், இந்த பேரிடர் காலத்தில் உள்கட்டமைப்பு வேலைகளில் முதலீடு வேண்டாம் என்ற மத்திய அரசின் வலியுறுத்தலை மீறி இந்த முறைகேடு நடந்துள்ளதாக புகார் கொடுக்கப்பட்டும் லஞ்ச ஒழிப்பு துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சதீஸ்குமார் தலைமையில் விசாரணைக்கு வந்தது. டெண்டரே ஒதுக்காத போது எவ்வாறு ஊழல் நடந்திருக்க முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினர். டெண்டரில் யாரும் பங்கேற்காத போது ஊழல் நடந்துள்ளதாக கூறுவதில் முகாந்திரம் இல்லையெனவும் இந்த வழக்கை ஆர்.எஸ். பாரதி திரும்ப பெறுவதே முறையாக இருக்கும் எனவும் நீதிபதி கூறினார். இது குறித்து ஆர்.எஸ். பாரதியிடம் விளக்கம் அளிக்கவும் வழக்கை ஜூன் 18க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.