பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் பிஎம்டபிள்யூ நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட நிறுவனத்திற்கு, இந்தியாவில் சமீபத்தில் ‘தர்ம சங்கடம்’ ஏற்பட்டுள்ளது.
ஆம், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த விரக்தியடைந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்1 (BMW X1) வாடிக்கையாளர் ஒருவர், தனது காரில் குப்பைகளை சேகரித்து, ஆத்திரத்தை காட்டியுள்ளார். பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இருந்து வெளிவரும் மிகவும் பிரபலமான எஸ்யூவி கார்களில் ஒன்றாக எக்ஸ்1 திகழ்ந்து வருகிறது.

தற்போது, குப்பைகளை சேகரித்த நபர், பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாங்கியுள்ளார். ஆனால், காரில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் காரை வாங்கிய பின் திருப்தியான மனநிலை அவருக்கு ஏற்படவில்லை. போதாக்குறைக்கு தன்னுடைய காரில் ஏற்பட்ட பிரச்சனைகளை சர்வீஸ் மையம் அணுகிய விதமும் அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே தனது கோபத்தையும், ஏமாற்றத்தையும் வெளிக்காட்டுவதற்காக அவர் இப்படி குப்பைகளை சேகரித்துள்ளார். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ராஞ்சி ஷோரூமில், புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரின் எஸ்டிரைவ்20டி (sDrive20d) வேரியண்ட்டை அந்த நபர் வாங்கியுள்ளார். ஆனால் ஒரு சமயத்தில் டயரில் பெரிய பஞ்சர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே, தன்னுடைய காரை உரிமையாளர் ஷோரூமிற்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது ஸ்பேர் டயரை பயன்படுத்தும்படி அவருக்கு ஷோரூமில் பரிந்துரை செய்துள்ளனர். அவர்கள் டயரை சரி செய்யவோ அல்லது மாற்றி தரவோ இல்லை என கூறப்படுகிறது. ஆனால் ஸ்பேர் டயரை பயன்படுத்திய பிறகு, அலைன்மெண்ட்டில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.

இதேபோல் இன்னும் ஒரு சில சிறிய குறைபாடுகளையும் அவர் சந்திக்க வேண்டியிருந்ததாக சொல்லப்படுகிறது. ஒட்டுமொத்தமாக சர்வீஸ் மையத்தின் செயல்பாடுகள் அவருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பிஎம்டபிள்யூ எக்ஸ்1 சொகுசு எஸ்யூவி காரில் குப்பைகளை சேகரித்து அவர் தனது அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளார்.
இந்த செயல்பாட்டின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரின் உரிமையாளரிடம் ஏற்கனவே பிஎம்டபிள்யூ இஸட்4 (BMW Z4) கார் ஒன்று இருப்பதாகவும், அவர் அந்த வாகனத்தை நேசிப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் பிஎம்டபிள்யூ நிறுவனத்தை காட்டிலும், சம்பந்தப்பட்ட சர்வீஸ் மையத்தின் மீதுதான் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார் நிறுவனங்கள் மற்றும் சர்வீஸ் மையங்கள் மீதான அதிருப்தியில், வாடிக்கையாளர்கள் இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்துவது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்பு கழுதைகள் மூலம் காரை இழுக்க வைப்பது போன்ற வித்தியாசமான போராட்டங்களை, வாடிக்கையாளர்கள் நடத்தியுள்ளனர்.