வரும் 14ஆம் தேதி மதியம் 2:30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட உள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்திய மக்கள் பார்வை எல்லாம் இஸ்ரோ பக்கம் திரும்பியுள்ளது. நிலவில் தன் தடத்தை பதித்த ஒரு சில நாடுகளில் இந்தியாவும் தற்போது இணைய போவதை நினைத்து இந்திய மக்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த வரலாற்று முக்கியமான நிகழ்வை நேரில் காண பல ஆர்வமாக உள்ளனர். ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் பார்வையாளர்களுக்கான கேலரி ஒன்று இருக்கிறது.
அந்த கேலரியில் இருந்து பார்த்தால் வெறும் கண்ணால் சந்திரயான் 3 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை காண முடியும். சந்திரயான் 3 விண்ணில் ஏவப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியான பின்பு இதை நேரில் பார்க்க பலர் ஆர்வமாக இருந்தனர். இந்நிலையில் நேற்று இஸ்ரோ இந்த நிகழ்வை நேரில் காண்பதற்கான முன்பதிவு துவங்கியது. இஸ்ரோவிடம் உள்ள இந்த பார்வையாளர் கேலரியில் ஒரே நேரத்தில் 5000 பேர் கூடியிருந்து இந்த ராக்கெட் ஏவுதலை நேரில் காண முடியும்.இந்த ராக்கெட் ஏவுதலை நேரில் காண்பதற்கான கட்டணம் எதுவும் இல்லை இலவசம் தான் என்றாலும் வெறும் 5000 பேர் தான் பார்க்க முடியும் என்பதால் இதற்கு முன்பதிவு என்பது அவசியமாக இருக்கிறது. இதையடுத்து இஸ்ரோ தனது வெப்சைட்டில் இதற்கான முன்பதிவு துவங்கியது. முன்பதிவு துவங்கப்பட்ட ஒரு சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இந்த ராக்கெட் ஏவுதலை நேரில் பார்க்கும் இடம் இஸ்ரோவிற்கு சொந்தமான ஸ்பேஸ் தீம் பார்க்க உள்ளே அமைந்துள்ளது.
இங்கு முதல் கட்டமாக ராக்கெட் கார்டன் இருக்கிறது. அங்கு சவுண்டிங் ராக்கெட்,எஸ்எல்வி, ஏஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மார்க் 3 ஆகிய ராக்கெட்டுகளின் மாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மக்கள் அந்த ராக்கெட்களுக்கு அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும்படி போட்டோ பாய்ண்டுகளும் உள்ளன. இந்த பூங்காவிற்கு நடுவே ஒரு பவுண்டேனும் இருக்கிறது. அடுத்ததாக லாஞ்ச் வியூ கேலரி இருக்கிறது. இந்த இடம் இஸ்ரோவிடம் உள்ள இரண்டு லான்ச் பேடுகளையும் வெறும் கண்ணால் பார்க்கக் கூடிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒரே நேரத்தில் 5000 பேர் ஒன்றாக கூடி ராக்கெட் விண்ணில் ஏவுதலை நேரில் வெறும் கண்ணால் பார்க்க முடியும். அடுத்ததாக இந்த இடத்தில் ஸ்பேஸ் மியூசியம் இருக்கிறது. இங்கு இந்திய விண்வெளி ஆய்வு குறித்த தகவல்கள் எல்லாம் பொதுமக்கள் பார்வைக்காக வழங்கப்படுகிறது. இங்கு வரலாறு, கல்வி, தொழில்நுட்பம், சாதனங்கள், உலக விஷயங்கள் மற்றும் எதிர்காலம் என ஆறு பிரிவுகளாக இங்கு கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது லார்ஜ் நியூ கேலரி மற்றும் ஸ்பேஸ் மியூசியம் மட்டுமே பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டுள்ளது மற்ற அனைத்தும் தற்போது பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகளில் நடந்து வருகிறது. அந்த பகுதிக்கு அனுமதி கிடையாது. மற்ற இரண்டு பகுதிகளையும் பொதுமக்களால் பார்க்க முடியும்.