நீரில் மூழ்கும் நபரை காப்பாற்றும் குட்டி யானையின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் உள்ள பாலகாட்டில் ஒரு சில மனித மிருகங்கள், கர்ப்பிணி யானைக்கு, அன்னாசி பழத்தில் வெடிப் பொருட்களை வைத்து உணவாக அளித்தனர். வெடிப்பொருட்கள் யானையின் வாயில் வெடித்ததால், பலத்த காயமடைந்த யானை, கடுமையான வேதனையை அனுபவித்து, தண்ணீருக்குள்ளேயே நின்று மரணித்தது.
இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மனிதம் எங்கே போனது என்று பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். மேலும் கர்ப்பிணி யானைக்கு மனித நேயமற்ற இந்த கொடூர செயலை அரங்கேற்றிய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் ஒரு குட்டியானையின் பெருந்தன்மையை பறை சாற்றும் வகையில் தற்போது ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தண்ணீரில் மூழ்கும் நபரை பார்த்த குட்டி யானை ஒன்று, அந்த நபரை காப்பாற்றி கரை சேர்க்கிறது. ட்விட்டரில் வைரலாகி வரும் இந்த வீடியோவை இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
இந்த அழகான வீடியோ AnimalsWorld என்ற ட்விட்டர் பயனாளர் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் தனது பதிவில் “ இந்த யானை அந்த நபர் தண்ணீரில் மூழ்கப் போகிறார் என்று நினைத்துக் கொண்டு அவரைக் காப்பாற்றி கரை சேர்க்கிறது. ஆனால் உண்மையில் இதற்கு தகுதியற்றவர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.