நம்முடைய ஒட்டுமொத்த உடல்நலம், எடையை கட்டுப்படுத்துதல், நிம்மதியான தூக்கம், செரிமானச் செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்றம் ஆகிய பல முக்கிய விஷயங்களை நிர்ணயிப்பது இரவு உணவுதான் என்று பல மருத்துவ ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, இரவு உணவில் என்னென்ன இருக்க வேண்டும், அதை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து இங்கே பார்ப்போம்.
இரவு உணவுக்கான சரியான நேரம் : இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் இரவு உணவை முடித்துக் கொள்வது இதயப் பிரச்சனைகளைக் கணிசமாகக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. இது பெண்களுக்கு அதிக நன்மைகளைத் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொதுவாக, படுக்கைக்குச் செல்வதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடித்துவிட வேண்டும் என்பதே பொதுவான பரிந்துரையாக உள்ளது.
தாமத உணவால் ஏற்படும் ஆபத்துகள் : நம் உடல், சர்காடியன் ரிதம் எனப்படும் உள்ளுறை உடல் கடிகாரத்தின்படி செயல்படுகிறது. இந்த ரிதம் சீராகச் செயல்பட்டால்தான் உடல் இயல்பாக இருக்கும். இரவு 9 மணிக்கு மேல் தாமதமாகச் சாப்பிடும்போது, இந்த ரிதம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, இரவு 9 மணிக்கு மேல் உணவு உட்கொள்வது இதயப் பிரச்சனைகள் மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகளை 28% வரை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
படுக்கைக்குச் செல்வதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பே சாப்பிடும்போது, செரிமானம் எளிதாக நடக்கிறது. இதனால் உடலில் அமிலப் பிரச்சனை, செரிமானக் கோளாறு, உப்புசம் போன்றவை ஏற்படுவதில்லை. இதன் நீட்சியாக, உடலுக்கு நல்ல ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிறது. மறுநாள் சோர்வின்றிச் சுறுசுறுப்பாகச் செயல்பட இது உதவுகிறது.
ஆரோக்கியமான இரவு உணவும் பலன்களும் : இரவு உணவில் அதிக அளவில் ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்வது, அல்லது அதிக உணவு உண்பது ஆகியவை உடல் எடை அதிகரிப்புக்கு முக்கியக் காரணம் என்கிறது ஆய்வு. எனவே, இரவில் அதிக கலோரிகள் கொண்ட உணவுகளைத் தவிர்த்து, பெரும்பாலும் காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகள் மற்றும் தானியங்கள் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்வது நல்லது.
இரவு உணவைச் சீக்கிரமாக முடிப்பதால், இன்சுலின் சுரப்பு சீரடைந்து டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். உணவு உண்ட பிறகு, ஒரு சிறு நடைப்பயணம் மேற்கொள்வது அல்லது சிறிய வேலைகளைச் செய்வது செரிமானத்தை மேலும் எளிதாக்கி, இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்க உதவும். ஆகையால், உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவைக் கட்டுப்படுத்தவும், ஆரோக்கியமாக வாழவும் விரும்புபவர்கள், சரியான நேரத்தில் இரவு உணவை முடித்துவிட்டுப் படுக்கைக்குச் செல்வதே தங்கள் இலக்கை அடைவதற்கான எளிய வழியாகும்.



