இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி என்ற பெயரில் டிக்டாக் சி.இ.ஒ கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-சீனா இடையே கடுமையான மோதல்போக்கு நிலவி வருகிறது. மேலும், இந்தியர்கள் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் #BoycottChineseProducts என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது. ஒரு சில இடங்களில் சீன பொருட்களை உடைத்தும் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் டிக் டாக், யூசி பிரவுசர், வி-சாட், யூ-கேம், ஹலோ, ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்திய மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கியதால் அவற்றிற்கு தடை விதிப்பதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் டிக்டாக் செயலியின் தலைமை செயல் அதிகாரி கெவின் மேயர், ‘இந்திய ஊழியர்களுக்கு ஒரு செய்தி’ என்ற தலைப்பில் ஒரு கடித ஒன்றை எழுதியுள்ளார். அதில் “ 2018 முதல், இந்தியாவில் 200 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் தங்கள் மகிழ்ச்சியையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தவும், வளர்ந்து வரும் உலகளாவிய சமூகத்துடன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் டிக்டாக்கை பயன்படுத்தி வருகிறார்கள்.
எங்கள் ஊழியர்கள் எங்கள் மிகப்பெரிய பலம், அவர்களின் நல்வாழ்வே எங்கள் முன்னுரிமை. 2,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நாங்கள் உறுதியளித்துள்ளோம், அவர்கள் பெருமை கொள்ளக்கூடிய நேர்மறையான அனுபவங்களையும் வாய்ப்புகளையும் மீட்டெடுக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். யாரும் கவலைப்பட தேவையில்லை.

உலகளாவிய அரங்கில் தங்கள் திறமைகளையும் திறமையையும் பகிர்ந்து கொள்ளும்போது, இந்த கலைஞர்கள், பொழுதுபோக்கு மற்றும் விளம்பரம் போன்ற துறைகளில் கலைஞர்கள் பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் சங்கங்களுக்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். மேலும் டிக்டாக் செயலி, திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்களின் பிரத்யேக களமாகக் கருதப்பட்டது. இன்று, நாடு முழுவதும் தொலைதூர நகரங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் கூட டிக் டாக் பயனர்களை கொண்டுள்ளது என்பது தான் உண்மை” என்று தெரிவித்துள்ளார்.