சென்னையில் குடிசைப் பகுதியை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு, வீடு திரும்பும் போது ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கொரானா பரவலை கட்டுப்படுத்த நீட்டிக்கபட்டுள்ள ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சென்னை மாநகராட்சியில், நோய்த் தொற்று தீவிரமாக உள்ள பகுதிகளில் (Hot spots / Containment Zones) உள்ள ஏழைகள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும், கொரானா நோய்த் தொற்றுடன் ரத்தக் கொதிப்பு, இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, புற்று நோய் போன்ற நோய் உள்ளவர்கள் இந்நோய்த் தொற்றினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது. இப்பகுதியில் வாழும் ஏழைகளின் வாழ்விடங்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலையில் அமைந்துள்ளன.

எனவே, ஒரு முக்கிய நோய் பரவல் தடுப்புப் பணியாக சென்னை மாநகராட்சியில், குறிப்பாக நெரிசலான குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையாக வீடுகள் தோறும் தீவிர ஆய்வு செய்து கண்டறிந்து, பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களில் குறைந்தபட்சம் 7 நாட்களாவது தங்க வைத்து, அவர்களை நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்ற ஒரு முக்கிய நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது.
இதனால், சென்னை மாநகராட்சி பகுதிகளில் அவர்களது வாழ்விடத்தில் நோய்ப் பரவல் தடுக்கப்படும். அவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்படும் போது, அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சியில் மட்டும் அவர்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பும்போது தலா 1,000 ரூபாய் ரொக்க நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.