சென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என்று முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி மேட்டூர் நீரை திறந்து வைத்தார். அதன் பிறகு உரையாற்றிய அவர் “ சென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. இந்த தவறான செய்தியை பரப்பியவர்கள் மீது சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை என்பது அதிக மக்கள்தொகை கொண்ட நெருக்கமான பகுதி. அதனால் தான் சென்னையில் நோய் தொற்று அதிகமாக பரவி வருகிறது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். தேவையின்றி வெளியில் சுற்றுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும் போது அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். இதையெல்லாம் கடைபிடித்தாலே தொற்றில் இருந்து நம்மை காத்து கொள்ள முடியும்.
எனினும் மக்கள் அரசின் வழிமுறைகளை கடைபிடிப்பதில்லை. பெரும்பாலானோர் மாஸ்க் அணிவதில்லை என்பது வேதனையாக இருக்கிறது. கொரோனா வைரஸ் தடுப்பு பணியை மேற்கொள்ளும் அரசின் வழிமுறையை மக்கள் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் 70 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.