சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு கொரோனா நிவாரணமாக தலா ரூ.1000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அவசியம் என மருத்துவர் நிபுணர் குழு முதல்வரிடம் வலியுறுத்தியது. இதைதொடர்ந்து நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், அரிசி ரேஷன் அட்டை தாரர்களுக்கு தலா ரூ. 1000 நிவாரணமாக வழங்கப்படும். அதன்படி சென்னை மாநகராட்சி, மீஞ்சூர், திருவள்ளூர், பொன்னேரி மக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். பூவிருந்தவல்லி, ஈக்காடு, சோழவரம், செங்கல்பட்டு மறைமலைநகர் மக்களுக்கு நிவாரணம் தரப்படும். அதேபோல் கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூளர், காஞ்சிபுரம் மக்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்கள், பிறநல வாரிய உறுப்பினர்களுக்கும் ரூ. 1000 நிதியுதவி வழங்கப்படும்.
பொதுமக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை மக்கள் தவறாமல் கடைப்பிடித்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.