தமிழகத்தில் 3-வது நாளாக இன்றும் 1,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24.000-ஐ தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதுவரை இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதேபோல் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாகவே, தினமும் சராசரியாக 700-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
ஆனால் இதுவரை இல்லாத புதிய உச்சமாக நேற்று, நேற்று முன் தினம் ஆகிய 2 நாட்களிலும் 1,000 பேருக்கு மேல் தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து 23,000-ஐ தாண்டியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று மட்டும் 10,588 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் புதிதாக 1091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 55 பேருக்கு இன்று தொற்று உறுதியாகி உள்ளது. இன்று சென்னையில் மட்டும் 809 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,579-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளாதால் கொரோனா பலி எண்ணிக்கை 197-ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 536 பேர் குணமடைந்ததால், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13,706-ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,680 பேர் மருத்துவமனையில் கொரொனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.