ஒருவர் அல்லது இருவருக்கு கொரோனா உறுதியானால், அலுவலகத்தை மூட வேண்டிய அவசியமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் குறிப்பிட்ட அளவிலான பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலையில் கொரோனா காலத்தில் அலுவலகங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஒன்று அல்லது 2 பணியாளர்களுக்கு கொரோனா தொற்றூ ஏற்பட்டால், அலுவலகத்தை மூட வேண்டிய அவசியமில்லை. தெர்மல் பரிசோதனை கருவி மூலம் உடல் வெப்பநிலையை பரிசோதித்த பின்னரே அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் ஊழியர்களை, அலுவலகத்திற்குள் வர அனுமதிக்கக் கூடாது. ஆலோசனைக் கூட்டங்களை காணொலிக் காட்சி மூலம் நடத்த வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.