சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு உயரதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் என அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் திமுக எம்.எல்.ஏ. ஜே. அன்பழகன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அதிமுக எம்.எல்.ஏக்கள், திமுக எம்.எல்.ஏக்கள் ஒரு சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 2 அமைச்சர்கள் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். அவருக்கு மூச்சுத்திணறலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு ஏற்கனவே 2 முறை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்று முடிவு வந்தது.

இந்த சூழலில், அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 3-வது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அதன் முடிவு வெளியான பின்னரே அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பது தெரிய வரும்.
முன்னதாக இன்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா உறுதியான நிலையில், அவருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.