தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு 62,000-ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது. கடந்த 5 நாட்களாகவே, 2,000-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 59,000-ஐ கடந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் “ தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்ப்படுள்ளன. இதுவரை தமிழகத்தில் 9.19 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தினமும் 30,000 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. மொத்த 87 பரிசோதனை மையங்கள் உள்ளன. தமிழகம் முழுவதும் 75,000 படுக்கைகள் தயாராக உள்ளன.
இன்று மட்டும் புதிதாக 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,087- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,487 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,659-ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 37 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 794-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1,358 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34,112-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குணமடைந்தவர்கள் வீதம் அதிகமாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.