தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 90,000-ஐ கடந்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் 6-வது நாளாக இன்றும் 3,000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தில் இன்று புதிதாக 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90,167- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 2,393 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58,362-ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 1,550 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை 246 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 160 பேருக்கும், திருவள்ளூரில் 153 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 90 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 88 பேருக்கும், கடலூரில் 65 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 888 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 1,201-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,325 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 50,074-ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.