திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள அதவத்தூரில் வசிக்கும் பெரியசாமி என்பவரின் மகள், 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மதியம் குப்பை கொட்டுவதற்காக வீட்டை விட்டு வெளிறிய சிறுமி, வெகு நேரமாகியும் திரும்பாததால், பதறிப்போன பெற்றோர்கள் சிறுமியை தேடியுள்ளனர். இந்த சூழலில், அங்குள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள சோமரசம்பேட்டை போலீசார், 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்பது உடற்கூறாய்வுக்கு பின்னரே தெரியவரும் என்று கருதப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பிரேத பரிசோதனை முடிந்த பிறகு சிறுமியின் உடல் பெற்றோர்களிடன் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனிடையே சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது உடற்கூறாய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் தீக்காயம் காரணமாகவே சிறுமி உயிரிழந்ததாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது .
இந்த சூழலில் சிறுமியின் மரணம் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக சுமார் 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தனது பெற்றொருடன் இருந்த முன் விரோதம் காரணமாக சிறுமி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.