அமெரிக்க அதிபர் டிரம்பின் ட்விட்டர் பதிவு போலியானது என ட்விட்டர் நிறுவனம் கூறியிருந்த நிலையில், தற்போது எங்களது ஊழியர்களை விட்டுவிடுங்கள் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தபால் மூலம் செலுத்தலாம் என கலிபோர்னியா மாகாண கவர்னர் அறிவித்துள்ளார். அதை நடைமுறைப்படுத்தும் வகையில் அம்மாகாண கவர்னர் மே 8ம் தேதி வாக்குரிமை உள்ளவர்களுக்கு ஓட்டுச்சீட்டுகளை அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், ‛தபால் ஓட்டுச்சீட்டுகள் மூலம் மோசடி நிகழலாம்; கலிபோர்னியா அரசு வாக்குரிமை இல்லாதவர்களுக்கும் ஓட்டுச்சீட்டுகளை வழங்குகிறது,’ என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டை அமெரிக்க தனியார் நாளிதழ்கள் பொய்யானது என ஆதாரத்துடன் சுட்டிக்காட்டின. இதன் அடிப்படையில் ட்விட்டர் நிறுவனமும், டிரம்ப் பதிவிட்ட கருத்து போலியானது எனக்கூறியது. இதனால் ஆத்திரம் அடைந்த டிரம்ப், அமெரிக்க அரசியலில் ட்விட்டர் நிறுவனம் தலையிடுகிறது. அதிபராக நான் இதனை அனுமதிக்க முடியாது, எனக் கூறினார். இ
தற்கு பதிலளித்த ட்விட்டர் நிறுவனம், ‛டிரம்பின் பதிவு, எங்களின் விதிமுறைகளை மீறாவிட்டாலும், பதிவிட்ட தகவல்களின் உண்மைத் தன்மையை வெளிக்கொண்டு வரும் நோக்கிலேயே, நாளிதழ்கள் வெளியிட்ட ஆதாரங்கள் அடிப்படையில் போலியானது என தெரிவித்ததாக ட்விட்டர் நிறுவனம் விளக்கமளித்தது.

இதை ஏற்க மறுத்த டிரம்ப், தனது பதிவு சரியானது தான், இது குறித்தான நடவடிக்கை பெரியளவில் இருக்கும் என ஏச்சரிக்கை விடுத்தார். இதற்கு ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக், ‛ட்விட்டர் நிறுவனத்தில் நடக்கும் அனைத்து செயல்பாடுகளுக்கும் பொறுப்பானவர் ஒருவர் இருக்கிறார். அவர் நான் தான். ஆகையால் தயவு செய்து எங்களது ஊழியர்களை விட்டு விடுங்கள். நாங்கள் உலகமெங்கும் நடக்கும் தேர்தல் குறித்த தவறான தகவல்களை சுட்டிக்காட்டுவோம். அதேசமயம் எங்கள் தவறுகளை ஒத்துக்கொள்வோம்,’ என தனது ட்விட்டார் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்