மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுகிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது சாத்தான்குளம் பயணம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுருந்தார். அதில், சேலத்தில் கொளுத்தும் வெயிலில் 20 அடிக்கு ஒருவரென, கொளுத்தும் வெயிலில் ஆண், பெண் காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தாக குறிப்பிட்டிருந்தார். அவர்கள் முதல்வருக்கான பந்தோபஸ்து என்று கூறியதாகவும், ஊரடங்கில் அனைவரும் வீடடங்கியுள்ள சூழலில் முதல்வரை யாரிடமிருந்து பாதுகாக்க இந்த பந்தோபஸ்து எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் சமீபகாலமாக அதிகரித்து வரும் போலீசாரின் வன்முறைக்கு இதுபோன்ற பணிச்சூழலும் காரணமாக இருக்குமோ என்ற எண்ணம் எழுவதை தவிர்க்க முடியவில்லை என்று உதயநிதி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் கருத்து குறித்து இன்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் “உதயநிதி ஸ்டாலின் இ பாஸ் பெறாமல், சட்டத்தை பெறாமல் சாத்தான்குளம் சென்றுள்ளார். இதுகுறித்து அவர் தான் விளக்க வேண்டும்” என்று தெரித்தார்.

இந்நிலையில் அமைச்சரின் கேள்விக்கு உதயநிதி ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அவரின் பதிவில் “மெயின் ரோடு, செக் போஸ்ட்கள் அனைத்திலும் போலீசாருக்கு பதிலளித்துள்ளோம். இ-பாஸை காட்டிய பிறகே மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தனர். ஆனால், என் சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுவதாகவே இதை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.