பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அஃப்ரிடி “ வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. எனக்கு கடுமையான உடல்வலி இருந்தது. அதன் பிறகு எனக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதிலிருந்து விரைவில் குணமடைந்த உங்களது பிராத்தனைகள் தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து அஃப்ரிடி தனது தொண்டு நிறுவனம் மூலம் எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறார். ஆயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட அடிப்படை பொருட்களை அவர் கொரோனா நிவாரணமாக வழங்கினார்.
அவரது இந்த செயலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் ஆகியோரின் ஆதரவும் கிடைத்தது. எனினும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும், பிரதமர் மோடி குறித்தும் அஃப்ரிடி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.