கொரோனாவால் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக சுமார் 25 கோடி பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கை ஒன்றில் பள்ளி மாணவர்கள் தவிர சுமார் இரண்டரை கோடி அங்கன்வாடி மையங்களில் உள்ள மாணவர்களும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பள்ளிகள் அடைக்கப்பட்டிருப்பதால் மாணவர்களின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய மாநில அரசுகள் கல்வியை இணையவழியிலும் மொபைல் ஆப், கல்வித் தொலைக்காட்சிக் வழியிலும் முயற்சி எடுத்து வருவதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. சுமார் 24 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே இணையம் மொபைல் வசதிகள் இருப்பதாகவும் இதன் காரணமாக கிராமப்புற மாணவர்களும் நகர்ப்புற ஏழைக்குழந்தைகளும் இந்த ஆண்டு கல்வியை இழந்துவிட வாய்ப்புள்ளதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.
வழக்கமான சுகாதாரம், மருத்துவம், தடுப்பூசிகள் போன்ற சேவைகள் கொரோனாவால் தடுக்கப்பட்டிருப்பதால் இந்தியாவில் சுமார் 3 லட்சம் குழந்தைகள் ஆறுமாதங்களில் இறக்கக்கூடும் என்றும் யுனிசெப் சார்பில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளும்பர்க் கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தெற்காசியாவில் 60 கோடி குழந்தைகளுக்கு கொரோனா அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.