உத்தரபிரதேசத்தில் தன்னை அன்பு பொழிந்து வளர்த்த பெண் உயிரிழந்ததை அறிந்த நன்றியுள்ள ஜீவனான நாய் ஒன்று, மாடியில் இருந்து குதித்து தன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கான்பூரில் சுகாதாரத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றி வரும் டாக்டர் அனிதா ராஜ் சிங், 12 ஆண்டுகளுக்கு முன்பு, தெருவோரமாக நோய்வாய்ப்பட்ட நாய்க்குட்டி ஒன்று இருந்ததை கவனித்துள்ளார். அதனை மீட்டு, நோயை குணப்படுத்தி தன்னுடன் பாசமாக வளர்த்து வந்துள்ளார். ஜெயா எனப் பெயரிடப்பட்ட அந்த நாயும், அவருடன் அதிக பாசத்துடன் வளர்ந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி அனிதாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை பார்த்த பாச நாய், செய்வதறியாமல் தவித்துள்ளது. பின்னர், வீட்டின் மாடிக்கு சென்று, கீழே குதித்து தன் உயிரை விட்டட்டுள்ளது.
இது குறித்து அனிதாவின் மகன் தேஜாஸ் கூறுகையில், ‛ஜெயாவை என் அம்மா, குடும்ப உறுப்பினர் போல பார்த்துக்கொண்டார். அவரது உடல் வீட்டிற்கு வந்ததும், மாடிக்கு சென்ற ஜெயா கீழே குதித்தது. காயங்களுடன் இருந்த ஜெயாவை மருத்துவமனை அழைத்து சென்றும் உயிரிழந்துவிட்டது,’ என்றார்.