கருப்பின இளைஞரின் மரணத்துக்கு நீதி கேட்டு 7வது நாளாக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பல இடங்களில் நடந்த அமைதி போராட்டத்தில் போலீசார் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு போராட்டகாரர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்காவின் மின்னாபொலீஸ் நகரில் போலீஸ் அதிகாரியால் கால் மூட்டால் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட ஜார்ஜ் பிளாய்டின் மரணத்துக்கு நீதி கோரியும், இனபாகுபாட்டுக்கு எதிராகவும் 7வது நாளாக தணியாத கோபத்துடன் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் ஈடுபடுவதால் கொரானா வைரஸ் பரவல் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் டென்வர் நகரில் அரசு கட்டிடத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கானோர் மண்டியிட்டு அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட் பவுல்வர்டு,பிலடெல்பியா உள்ளிட்ட இடங்களில் பேரணியாக சென்று தங்கள் கண்டனத்தை வெளிபடுத்தினர்.வாஷிங்டன் நகரில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் ஆர்பாட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
இதனிடையே கலிஃபோர்னியாவின் ஓக்லி மற்றும் ப்ரெண்ட்வுட் உள்ளிட்ட நகரங்களில் இனபாகுபாட்டிற்கு எதிராக நடந்த அமைதி போராட்டத்தில் மண்டியிட்டு பங்கேற்று போலீசார் தங்கள் ஆதரவை தெரிவித்த நிகழ்வும் அரங்கேறியது.போலீசாரின் இந்த செயலுக்கு ஆரவாரம் செய்து போராட்டக்காரர்கள் வரவேற்பளித்தனர்.