விஜய்க்கும் அவரது மேனேஜருக்கும் இடையே எந்தப் பிரச்சனையும் இல்லை. அவரை வேலையை விட்டும் நீக்கவில்லை என நடிகர் விஜய்க்கு நெருங்கியவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிவடைந்து, ரிலீஸிற்காக காத்துக்கொண்டுள்ளது. கொரோனாவின் காரணமாக இந்தப் படம் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில் விஜய்க்கும் அவரது மேனேஜரான ஜெகதீஷிற்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்துவருவதாகவும், அதன் காரணமாக அவரை விஜய் வேலையை விட்டு நீக்கிவிட்டதாகவும் செய்திகள் தொடர்ந்து பரவி வருகிறது. ஜெகதீஷ், தற்போது விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் லைன் புரோடியூசராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், மாஸ்டர் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவிலும் தனது மேனேஜர் ஜெகதீஷை புகழ்ந்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி குறுகிய காலத்தில் விஜய்க்கு நெருக்கமானவர் ஜெகதீஷ். இந்நிலையில் அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக வெளியான தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விஜய்க்கு நெருங்கியவர்களை விசாரித்த போது இந்த தகவல் பொய் என்பது தெரியவந்துள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டக் காலத்தில் இருந்தே இதுபோன்ற வதந்திகள் அதிகமாக பரவிவருகின்றது. நயன்தாரா, பிரபுதேவாவின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும், சிம்புவுக்கு தனது உறவினரின் மகளுடன் திருமணம் நிச்சயமாகிவிட்டதாகவும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தது. தற்போது அந்த வரிசையில் விஜய்யும் இடம்பிடித்துவிட்டார்.