
ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் பலரின் உயிரினை காவு வாங்கும் கொரோனாவின் பிடியிலிருந்து தப்பிக்க 400 ஆடுகளை பலிகொடுத்து வினோத வழிபாட்டினை ஊர்வா கிராம மக்கள் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் சந்தவாராவினை அடுத்த ஊர்வா கிராம மக்கள் கொரோனாவின் பிடியிலிருந்து தப்பிப்பதற்கான நூதன வழிபாட்டினை கையில் எடுத்தனர். அதற்காக கிராமத்தில் அமைந்துள்ள தேவி கோவிலில், கொரோனா வைரஸ் நோயினை விரட்டவும், சாமி ஆக்ரோஷத்தில் உள்ளதால் சுவாமியை சமாதானப்படுத்தவும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அந்த பூஜையின் போது ஆடுகளும், கோழிகளும் பலியிடப்பட்டன. இந்த நிலையில் நேற்று மட்டும் 400 ஆடுகள் மறறும் 100க்கும் மேற்பட்ட கோழிகள் ஒன்றாக வெட்டப்பட்டன. பின்னர், அவை மக்களுக்கு உணவாக சமைத்து பரிமாறப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவிற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாமல் தவித்துவரும் நிலையில் இது போன்று மேற்கொள்ளும் போது கொரோனாவிலிருந்து கிராமம் தப்பித்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.

மேலும் கோவில்களின் ஆடுகளை பலியிடும் போது எந்தவிதமான சமூக இடைவெளியும் முறையாக பின்பற்றவில்லை என்ற தகவல் மாவட்ட நிர்வாகத்தினருக்கு சென்றதையடுத்து அதிகாரிகள் அக்கிராமத்தில் முகாமிட்டு கொரோனாவின் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்திவருகின்றனர்.