
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை எங்களிடம் தாருங்கள் மூன்று நாட்களில் குணப்படுத்தி தருகிறோம் என்று தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு உள்ளவர்களில் 160 பேர் குறைந்த நாட்களிலேயே சித்த மருத்துவத்தின் மூலம், குணமடைந்துள்ளதால் சென்னை மாநகரப்பகுதியில் உள்ள அனைத்து கொரோனா சிகிச்சை மையங்களையும் எங்களிடம் ஒப்படைத்தால், மருத்துவர்கள் உதவியோடு சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம் என தேசிய சித்த மருத்துவ நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் சித்த முறைப்படி அவர்களுக்கு மருந்தினை வழங்கி 3 நாட்களில் குணப்படுத்திவிடுவோம் எனவும் தெரிவித்துள்ளது.

தேசிய சித்த மருத்துவ மையம், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவத்தின் மூலம், சென்னையில் உள்ள 160 நோயாளிகளுக்கு 3 நாட்களில் சிகிச்சையின் மூலம் குணமாக்கப்பட்டுள்ளது. எனவே மிகக்குறைந்த நாட்களிலேயே, கொரோனா பரவலை பெருமளவு குறைத்து, பல்வேறு பகுதிகளை பாதுகாப்பான பகுதிகளாக மாற்றியுள்ளது. இந்தநிலையில் தான் கொரோனா தொற்றுக்கு, சித்த மருத்துவத்தின் மூலம் எளிய வகையில் தீர்வு கிடைப்பதால், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கொரோனா மையங்களையும் தங்களிடம் ஒப்படைத்தால், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தங்களது சித்த மருத்துவர்கள் தயாராக இருப்பதாக தேசிய சித்த மருத்துவ நிறுவன உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்றின் பாதிப்பிற்கேற்ப 3 வகையான சித்த மருந்துகள் தங்களிடம் தற்போது கைவசம் உள்ளது எனவும், இதோடு பல்வேறு ஆராய்ச்சிகளையும் மருத்துவர்கள் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துவருகின்றனர். மேலும் சித்த மருத்துகள் கொரோனா தொற்று பாதிப்பை எளிதில் குணமாக்கும் திறன் கொண்டவையாக இருப்பதாக தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.

எனவே, சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உள்ளிட்டவைகளில் உள்ள கொரோனா மையங்களை தங்களது கட்டுப்பாட்டிற்கு தந்தால், தாங்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க தயாராக உள்ளதாகவும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்துவருகிறது.