
லடாக்கில் ஏற்பட்ட இந்தியா- சீனா மோதல் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சிக்கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள இந்தியர் அனைவரும் நாட்டினை காப்பாற்றுவார்கள் எனவும், யாருக்காகவும் ஒரு அங்குலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என தெரிவித்தார்.
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன வீரர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகினர். இப்பிரச்சனை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்புவிடுத்திருந்தார். இதில் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், லடாக் பிரச்சனையில் இந்திய ராணுவம் மற்றும் மத்திய அரசிற்கு எப்போதும் தமிழகம் துணை நிற்கும் என தெரிவித்தார். நாட்டின் எல்லைப்பகுதியை காப்பதற்காக போரிட்டு உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் தெரிவித்த ஒபிஎஸ், நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும், இதில் எந்த சமரசமும் இருக்க முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும் கொரோனா போன்ற தேசிய பேரிடர் காலத்தில் நாட்டினை சிறப்பாக வழிநடத்திவரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றியை தெரிவிப்பதாகவும் ஒபிஎஸ் பேசியுள்ளார்.