சீனாவிற்கு ஆதரவளிக்கும் பிரதமர், ஏன் இந்திய ராணுவத்தை ஆதரிக்கவில்லை என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ சீனா நமது நிலத்தை பறித்துவிட்டது. இந்தியா, அதை திரும்ப பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அது இந்திய நிலம் இல்லை என்று சீனா கூறுகிறது. சீனாவின் கூற்றை பிரதமர் பகிரங்கமாக ஆதரிக்கிறார். சீனாவிற்கு ஆதரவளிக்கும் பிரதமர் ஏன் இந்தியாவையும், நமது ராணுவத்தையும் ஆதரிக்கவில்லை..?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய – சீன எல்லையான லடாக்கில் கடந்த ஒரு மாத காலமாகவே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், கடந்த 15-ம் தேதி இருநாட்டு ராணுவத்தினர் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்த்து. கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்த கொடூர தாக்குதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன தரப்பிலும் 35 பேர் வரை உயிரிழந்திருக்க கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் தெரிவித்தன. எனினும் சீன தரப்பில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அந்நாடு அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடவில்லை.

இந்நிலையில் இரு நாடுகளுக்கிடையே, உயர்மட்ட இராணுவ பேச்சுவார்த்தைகளின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கிழக்கு லடாக்கின் பாங்காங் சோ பகுதியில் உள்ள சீனப் படையினரை திரும்பப் பெறுமாறு இந்தியா அழுத்தம் கொடுத்தது. மேலும் அதே நேரத்தில் ஜூன் 15 அன்று கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட ‘முன்கூட்டியே திட்டமிடப்பட்ட’ கொடூர வன்முறை குறித்த தங்களது எதிர்ப்பையும் இந்தியா பதிவு செய்தததாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த பேச்சுவார்த்தையில் தற்போது ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மோதல் ஏற்பட்ட இடத்தில் இருந்து, தங்கள் நாட்டு படைகளை திரும்பப் பெற இருநாடுகளை சேர்ந்த அதிகாரிகளும் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.