மதவாதத்தை எதிர்ப்பவர் 2024 தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை..? அவர் செய்தது ஊழல் இல்லையா..? விஜய்க்கு எதிராக திரும்பிய அமீர்..!!

தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். மேலும், நாட்டில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், மதவாதம் மூலம் மக்களைப் பிளவுபடுத்தும் சக்திகள் அதிகரித்துவிட்டதாகவும் விஜய் தனது அறிக்கையில் கூறியிருந்தார். ஆனால், கடந்த காலங்களில் நடிகர் விஜய் வரி கட்டாமல், வருமானவரியைச் சரியாகத் தாக்கல் செய்யாமல் இருந்துள்ளதாக நீதிமன்றமே கூறியுள்ளது. இன்று ஊழலை எதிர்க்கும் விஜய், அன்றைக்கு அப்படி நடந்து கொண்டது சரியா? என்று பல கேள்விகளை முன்வைத்துள்ளார் இயக்குநர் அமீர்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “விஜய்க்கு அரசியல் ஆசை உள்ளது என்பது எனக்குத் தெளிவாகத் தெரியும். அவர் அரசியலுக்கு வந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ரஜினி வரப்போகிறேன் என்று 25 ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டே இருந்தார். அதனால் அவர் ஆதாயத்தை அடைந்தார். ஆனால், கடைசி வரை அவர் அரசியலுக்கு வரவில்லை. விஜய் அப்படி இல்லை. அவர் 10 ஆண்டுகளுக்குள் ஒரு முடிவை எடுத்து அரசியலுக்கு வருகிறேன் என்பதை உறுதிப்படுத்தி விட்டார். எனவே அவரை நான் பாராட்டுகிறேன்.

விஜய் வெளியிட்டிருந்த அறிக்கையில் மதவாதம் மற்றும் ஊழலை எதிர்க்கப்போகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவர், ஊழலையும் மதவாதத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதே தவறு. ஊழலும் மதவாதமும் ஒன்று அல்ல. ஊழல் கூடிக்கொண்டே போனால், ஒரு கட்டத்திற்குப் பின்னால் அதை சட்டரீதியாகத் தட்டித் தூக்கிவிடலாம். ஆனால், மதவாதம் அப்படி இல்லை. அது வளர்ந்து கொண்டே சென்றால், அங்கே ஜனநாயகம் இருக்காது. சர்வாதிகாரம் தலைதூக்கிவிடும்.

விஜய் 2012இல் இங்கிலாந்தில் இருந்து இரு கார் வாங்கினார். அதைப் பதிவு செய்ய அரசு அலுவலகம் செல்கிறார். அதிகாரிகள் ஆவணங்களைப் பார்த்துவிட்டு இறக்குமதி செய்ய கார் என்பதால் வரி கட்ட சொல்கிறார்கள். விஜய் அந்த வரி தொகை அதிகமாக உள்ளது எனக் கட்ட மறுக்கிறார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் வந்தது.

நீதிமன்றம் என்ன சொன்னது தெரியுமா? ‘நடிகர்கள் திரையுலகில் மட்டும் ஹீரோவாக இருக்கக் கூடாது. நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்க வேண்டும். உங்களைப் போன்றவர்களிடம் இருந்து பெறப்படும் வரிதான் வறுமை நிலையில் உள்ள மக்களின் வளர்ச்சி திட்டத்திற்குச் செலவிடப்படுகிறது. அதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்’ என்றது. அதன்பிறகு விஜய்க்கு நீதிபதி அபராதம் விதிக்கிறார். விஜய் செய்தது எதற்குள் வரும் என்பதைப் பொதுமக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அன்று ஏன் இவர் வரி கட்ட மறுத்தார். அது ஊழலா? இல்லையா?

இன்றைக்கு ஊழலை எதிர்க்கக் கூடிய எத்தனை நடிகர்கள் தங்களின் படத்தை அதிக விலைவைத்து ப்ளாக்கில் டிக்கெட் விற்றபோது தடுத்தார்? அதைச் செய்யக் கூடாது என்று எத்தனை நடிகர்கள் சொன்னார்கள்? அது ஊழல் இல்லையா? ‘பிகில்’ படத்தின் போது அவரது வீட்டை வருமான வரித்துறையினர் சோதனையிட்டார்கள். இப்படி 2 முறை சோதனை நடந்தது. அதில், முன்னால் நடந்த பணப்பரிமாற்றம் சார்ந்த ஒரு ஆவணம் அதிகாரிகளுக்குக் கிடைக்கிறது. அதில் அவர் ‘புலி’ படத்தில் வாங்கிய சம்பளத்தில் 5 கோடி ரூபாயை அவர் கணக்கில் காட்டவில்லை. அதற்கு எல்லாம் ஒரு அபராதம் போட்டு அதிகாரிகள் ஒரு தொகையைக் கட்ட சொன்னார்கள். அதை விஜய் கட்டினார்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறோம் என்றால், அவரை குற்றஞ்சாட்டுவதற்காக அல்ல. அவர் ஊழல் பற்றிச் சொல்லி இருப்பதால் நாம் நடந்த சம்பவங்களைத் திரும்ப நினைவுபடுத்துகிறோம். அவ்வளவுதான். ஆக, இந்த ஊழல், நிர்வாக சீர்கேடு எங்கிருந்து தொடங்குகிறது? தனி மனிதனிடம் இருந்துதான் தொடங்குகிறது. அதை விஜய் விஷயத்திலேயே நாம் பார்த்திருக்கிறோம். அரசியல் ஆர்வத்தோடு ஆரம்பக் காலத்திலிருந்து வந்த விஜய், இந்த விஷயங்களில் எல்லாம் சரியாக நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. அப்படிப் பார்த்தால் விஜய் 2024 தேர்தலில் மதவாதத்தை எதிர்த்துப் போட்டியிட்டிருக்க வேண்டும். அதை அவர் ஏன் செய்யவில்லை? மதவாதத்தை எதிர்ப்பவர் ஏன் மவுனமாக இருக்கிறார்? தலைவராக இருக்க வேண்டும் என்பவர்கள் வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்” எனப் பேசி இருக்கிறார் இயக்குனர் அமீர்.

1newsnationuser6

Next Post

உலர் பழங்களை இந்த நோய் இருப்பவர்கள் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.! ஏன் தெரியுமா.!

Tue Feb 6 , 2024
தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் அதிகரித்து வரும் நோய் தாக்கத்தில் முக்கியமான ஒன்று சர்க்கரை நோய். சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவுகளில் பல்வேறு வகையான கட்டுப்பாடுகளை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உயர் இரத்த சர்க்கரை இருப்பவர்கள் உலர் பழங்களை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். உலர் பழங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு […]

You May Like