கேரளாவில் குடிபோதையில் வந்து அடித்து உதைக்கும் மூன்றாம் கணவனிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள, துப்பாக்கி உரிமம் வழங்க வேண்டும் என இரண்டாவது மனைவி, கேரள முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கேரள மாநிலம் ஆழப்புழா மாவட்டம் கற்றாணம் பகுதியை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், தனது கணவன், தினமும் தன் மீது சந்தேகம் கொண்டு அடித்து உதைப்பதால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறத்திக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் இருவரையும் அழைத்து பேசி சமரசம் செய்து வைத்த நிலையில் அவரது கணவர் மீண்டும் அந்த பெண்ணை அடித்ததாக கூறப்படுகின்றது.
இதையடுத்து கொதித்துப் போன அந்த பெண், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மற்றும் காவல்துறை இயக்குனர் லோக்நாத் பெக்ராவுக்கு புகார் மனு ஒன்றை இ-மெயிலில் அனுப்பிவைத்தார்.
அதில் தனது கணவர் தன்னை தினமும் கடுமையாக துன்புறுத்தி தாக்கி வருவதாகவும் இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், கணவனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் தன்னை தற்காத்துக் கொள்ள துப்பாக்கி உரிமம் வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.

இந்த மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ள புகார் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை மேற் கொள்ள டிஜிபிக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து குறத்திக்காடு காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரை பிடித்து விசாரித்தனர்.
இதில், புகார் அளித்த பெண் அந்த நபருக்கு இரண்டாவது மனைவி என்பதும், இந்த பெண்ணுக்கு புகாருக்குள்ளான நபர் மூன்றாவது கணவன் என்பதும் தெரியவந்ததால் பிரச்சனையின் மூலகாரணத்தை கண்டுபிடித்த போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.