டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு உலகின் மிகப்பெரிய தற்காலிக கொரோனா பராமரிப்பு மையத்தை அரசு உருவாக்கி வருகிறது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தலைநகரான டெல்லியில் மட்டும் இதுவரை 42,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,400 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூலை மாத இறுதிக்குள் டெல்லியில் கொரோனாவால் 5 லட்சம் பேர் வரை பாதிக்கக்கூடும் என்று அம்மாநில அரசு கணித்துள்ளது. எனவே கொரோனா நோயாளிகளுக்கு 1 லட்சம் படுக்கைகள் தேவைப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது,

இந்நிலையில் தெற்கு டெல்லியில் உள்ள சட்டார்புரில் அமைந்துள்ள ராதா சோமி ஆன்மீக மையத்தை, தற்காலிக பராமரிப்பு மையமாக டெல்லி அரசு மாற்றி வருகிறது. 10,000 படுக்கைகளுடன் கூடிய உலகின் மிகப்பெரிய தற்காலிக கொரோனா முகாம்களாக அந்த மைதானம் மாற்றப்பட்டு வருகிறது. 12,50,000 பரப்பளவு கொண்ட இந்த மையம், 22 கால்பந்து மைதானங்கள் அளவுக்கு பெரிய இடமாகும். மின்விசிறிகள், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த தற்காலிக முகாம்களில் சுமார் 3 லட்சம் பேருக்கு சிகிச்சையளிக்க முடியும்.

தற்காலிக கொரோனா முகாம்கள் அமைய உள்ள இடத்தை பார்வையிட்ட தெற்கு டெல்லி மாஜிஸ்திரேட் பி.எம் மிஷ்ரா, மத்திய அரசின் வழிமுறைகள் படி பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். 20 சிறிய மருத்துவமனைகளை போல், இந்த கோரோனா மையம் செயல்படும் என்றும், ஷிப்டு முறைகளில் 400 மருத்துவர்கள் இங்கு பணியாற்றுவார்கள் என்றும் தெரிவித்தார். ஆம்புலன்ஸ் மற்றும் கொரோனா பரிசோதனை ஆய்வு மையங்களும் இங்கு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.