ஜூன் 1 முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த முறை மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்திருந்தாலும் கூட, பொதுப் போக்குவரத்து, பள்ளிக் கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றை திறப்பதற்கு உள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது. இந்த ஊரடங்கு நாளை மறுதினத்துடன் முடிவடைய உள்ள நிலையில், மத்திய அரசு இதனை மேலும் நீட்டிப்பது குறித்து நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் மேற்குவங்கத்தில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் ஜூன் 1-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். அவை திறக்கப்படும் போது, 10 பேருக்கு மேல் ஒன்றாக கூட கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தேயிலை மற்றும் சணல் உற்பத்தி துறைகளும் ஜூன் 1 முதல் 100% பணியாளர்களுடன் இயங்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் முழுஅளவு பணியாளர்களுடன் இயங்கும் எனவும் மம்தா தெரிவித்துள்ளார்.