யமுனை நதியை சுத்தம் செய்ய 25 ஆண்டுகளில், ரூ. 5,000 கோடி திட்டங்களால் அரசுகள் சாதிக்காததை 2 மாத கொரோனா ஊரடங்கு சாதித்துவிட்டது.

சுமார் 1,400 நீளமுள்ள யமுனை நதி, இந்தியாவின் 7 மாநிலங்கள் வழியாக பாய்கிறது. அதில் பல்வேறு நகரங்களில் கொட்டப்படும் தொழிற்சாலைகளின் கழிவு காரணமாக யமுனை இந்தியாவின் அதிகம் மாசடைந்த நதிகளில் ஒன்றாகவும் மாறியது. அதிலும் குறிப்பாக ஹரியானா மற்றும் பானிபட் இடையே மட்டும் 300 யூனிட்களுக்கும் மேல் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் டெல்லி, ஆக்ரா, மதுரா ஆகிய நகரங்களில் மட்டு 80 சதவீதம் மாசடைந்த நதியாக யமுனை உள்ளது.
இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு காரணமாக யமுனை நதி தன்னை தானே தூய்மைப்படுத்தி உள்ளது. ஊரடங்குக்கு பிறகு 33% யமுனை நதி தூய்மையாகி உள்ளதாக டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய இந்திய – டேராடூன் வனவலங்கு நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி டாக்டர். ராஜீவ் சவுகான் “ நான் 2000-ம் ஆண்டு முதல் யமுனை நதி செயல் திட்டத்தில் இணைந்திருக்கிறேன். இந்தளவுக்கு யமுனை நதி சுத்தமாக இருந்ததை நான் இதுவரை பார்த்ததில்லை. மாசுபாட்டின் அளவு தொடர்ந்து குறைகிறது. ஊரடங்கின் தாக்கம் அனைத்து நதிகளிலும் தெரிவது ஆச்சர்யத்தை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

இதனிடையே நதிகள் உயிரியல் திறனை பயன்படுத்தி தங்களை தாங்களே சுத்தம் செய்து கொண்டுள்ளன என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் அந்தந்த மாநில அரசுகள், நதிகளில் தொழிற்சாலை கழிவுகள் கொட்டுப்படுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்த இக்கட்டான நேரத்தில் மனிதர்களின் வாழ்க்கை முறையை கொரோனா மாற்றினாலும், இயற்கை மீண்டும் பழைய நிலைக்கே மெல்ல மெல்ல திரும்பி வருகிறது.

தூய்மையான நதிகள், நீல வானம், பனிப் போர்த்திய இமயமலையின் காட்சிகள் என கடந்த சில நாட்களாக சுற்றுசூழலும் கூட தூய்மையாகி வருகிறது. இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.