
வேலூரில் முககவசம் அணியாமல் வெளியே சென்ற போது, போலீசாருக்கு பயந்து கீழே கிடந்த மாஸ்கினை அணிந்து சென்ற இளைஞரால் அவரது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா தொற்று பரவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க முகக்கவசம் அவசியம் என்பது கட்டாயமாக்கப்பட்டது உண்மை தான். ஆனால் போலீசாருக்கு பயந்து கீழே கிடந்த மாஸ்க்கினை எடுத்து போட்டதன் விளைவு வேலூரில் 5 பேருக்கு தற்போது கொரோனா உறுதியாகியிருப்பது தான்.
ஆம், வேலூர் மாவட்டம் காட்பாடி சிவராஜ் நகரை சேர்ந்த 20 வயதான இளைஞர், முகக்கவசம் அணியாமல் கடைக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மாஸ்க் இல்லாவிடில் அபராதம் விதிப்பார்கள் என்ற பயத்தில் அந்த இளைஞர், கீழே கிடந்த முகக்கவசத்தை எடுத்து பயன்படுத்தி உள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்ற நிலையில், சில நாட்களுக்கு பிறகு கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளது.

இதனையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில், இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினருக்கு மேற்கொண்ட சோதனையில் 5 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.