இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி ஜோடி பிரிந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ், கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, 4 வயதில் அன்வி என்கிற பெண் குழந்தை உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு, வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ். அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனையடுத்து, முதல் படத்திலேயே அவரது இசைக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அதனை தொடர்ந்து, பல ஹிட் படங்களுக்கு இசையமைத்த ஜி.வி. கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த டார்லிங் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
பென்சில், நாச்சியார், எனக்கு இன்னோரு பெயர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, புரூஸ்லி, செம, குப்பத்து ராஜா உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார். தற்போது, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான், பாலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான், அமரன், நிலவிற்கு என் மேல் என்னடி கோவம், வீரதீர சூரன், வாடிவாசல் என பல முக்கியத் திரைப்படங்களிலும் ஜி.வி. இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், தனது மனைவி சைந்தவியைப் பிரிவதாக ஜி.வி. பிரகாஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில், நீண்ட யோசனைக்குப் பிறகு, சைந்தவியும் நானும் திருமணமாகி 11 வருடங்கள் கழித்து, ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையைக் காத்துக்கொண்டு, எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்தோம் என்றும், இந்த ஆழமான தனிப்பட்ட மாற்றத்தின்போது எங்கள் தனியுரிமையைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். நாங்கள் பிரிந்து வருகிறோம் என்பதை ஒப்புக்கொண்டு, இது ஒருவருக்கொருவர் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
— G.V.Prakash Kumar (@gvprakash) May 13, 2024