நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இந்த சம்மருக்கு பெரும்பாலான நடிகர், நடிகைகள் ஸ்விட்சர்லாந்து, லண்டன் என்று குளிர் பிரதேசங்களுக்கு ஜாலி டூர் செல்வர். ஆனால், லேடி சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் நயன்தாரா சினிமாவில் அதிகளவில் கவனம் செலுத்தி வந்தாலும் ஆன்மிகத்திலும் நாட்டம் காட்டி வருகிறார். அதேபோல, தனது குடும்பத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், குமரி மாவட்டத்திற்கு சென்ற நயன்தாரா, கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையின் கோயிலுக்கு தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, சுவாமி தோப்பில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட சுவாமி கோயிலுக்கும் சென்று பிரார்த்தனை செய்தார். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தனர்.
அடுத்ததாக நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு சென்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி அங்கும் சாமி தரிசனம் செய்தனர். நயன்தாரா வந்திருப்பது குறித்து அறிந்த அவரது ரசிகர்கள் ஏராளமானவர்கள் கோவில்களில் திரண்டனர்.
பின்னர், சுவாமி தரிசனம் மேற்கொண்ட நயன்தாரா, ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.