வெப்பத்தால் தத்தளிக்கும் மக்களை காப்பாற்ற பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி விட்டது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அடிக்கடி வெப்ப அலையும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. அதற்கு ஏற்பவே கடும் வெப்ப அலைகள் வீசி வருகிறது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பத்தை தடுக்கும் வகையில், சுகாதாரத்துறை குளுமையாக இருக்கும் வகையில் ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளது. பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், கடும் வெப்பம் காரணமாக மக்களுக்கு உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படக் கூடும். உடலின் நீர் சமநிலையை மேம்படுத்த மாவட்டம் தோறும் பல்வேறு பகுதிகளில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும். ஜூன் 30ம் தேதி வரை மாவட்ட வாரியாக பொதுமக்களுக்கான மறுநீரேற்று மையங்களை அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.