இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் கூட்டணியில் உள்ள நாடுகள் மீது விரைவில் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப், பல்வேறு நாடுகளுக்கான வரியை அதிரடியாக உயர்த்தினார். பின்னர் இந்த வரிவிதிப்பு முடிவை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். இந்த அவகாசம் இன்றுடன் (ஜூலை 9) முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள அவர் அழைப்பு விடுத்தார். இருப்பினும், உலக நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மேலும், 12 நாடுகளுக்கான புதிய வரிவிதிப்புக்கான கடிதங்களில் கையெழுத்திட்டு விட்டதாகவும், நேற்று முன் தினமே, அது பற்றிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் கூறியிருந்தார்.
இந்த சூழலில், பிரிக்ஸ் அமைப்பு மாநாடு நடைபெற்றது. இந்த கூட்டமைப்பில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நிலையில், பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பிரிக்ஸ் நாடுகளின் அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும். இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது என்றும் அவர் கூறினார்.
டாலரை வலுவிழக்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும், ஆகையால், அமெரிக்காவின் வர்த்தக நலன்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் இது அமலாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா “உலக அரங்கில் நியாயமாக நடத்தப்படுவதை” உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக டிரம்ப் உறுதியளித்தார்.
அமெரிக்காவை காயப்படுத்தவே பிரிக்ஸ் உருவாக்கப்பட்டது: ரியோ டி ஜெனிரோவில் சமீபத்தில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு பதிலளித்து, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்தினார். இந்த உச்சிமாநாட்டில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆறு புதிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மூலோபாய ஒத்துழைப்பு குறித்த உயர் மட்ட விவாதங்களில் ஈடுபட்டனர்.
இந்தியா பாதிக்கப்படுமா என்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த டிரம்ப், அனைத்து பிரிக்ஸ் உறுப்பினர்களுக்கும் வரி விதிக்கப்படும் என்று மீண்டும் வலியுறுத்தினார். “பிரிக்ஸில் இருந்தால் அவர்கள் நிச்சயமாக 10 சதவீதம் செலுத்த வேண்டியிருக்கும், ஏனெனில் பிரிக்ஸ் நம்மை காயப்படுத்தவும், நமது டாலரை சீரழிக்கவும் அமைக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். டாலர் ராஜா. நாங்கள் அதை அப்படியே வைத்திருக்கப் போகிறோம்,” என்று அவர் கூறினார்.
“மக்கள் அதை சவால் செய்ய விரும்பினால், அவர்களால் முடியும். ஆனால் அவர்கள் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். அவர்களில் யாரும் அந்த விலையை செலுத்தப் போவதில்லை என்று நான் நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, அமெரிக்க டாலருக்கு மாற்றாக, பொது கரன்சியை உருவாக்க நினைத்தால், பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.