இந்த உலகில் மனிதர்கள் மட்டுமின்றி, எண்ணற்ற விலங்குகள், பறவைகள், பூச்சிகள் எனப் பல உயிரினங்கள் வாழ்கின்றனர். இவற்றில் பெரும்பாலானவை ஆபத்தற்றவை என்றாலும், சில விலங்குகள் மனிதர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், மரணத்தை விளைவிப்பவையாகவும் உள்ளன. மனிதர்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய, உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய உலகின் மிகவும் கொடிய 10 விலங்குகள் எவை என்று இங்கே பார்க்கலாம்.
யானை : உருவத்தில் பிரமாண்டமாக இருந்தாலும் பொதுவாக மென்மையான விலங்கான யானை, தனக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அல்லது மதம் பிடிக்கும்போது மிகவும் ஆக்ரோஷமாக மாறும் குணம் கொண்டது. கோபத்தில் சுற்றுப்புறங்களை நாசம் செய்வதுடன், கண்ணில் எதிர்ப்படும் மனிதர்களைத் தாக்கி அல்லது காலால் மிதித்துக் கொல்லும் சக்தி படைத்தது.
எருமை : பெரும்பாலும் “கருப்பு மரணம்” (Black Death) என்று குறிப்பிடப்படும் ஆப்பிரிக்க எருமைகள், எப்போது தாக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அவை மனிதர்களை தாக்கத் துணிந்துவிட்டால், அபரிமிதமான சக்தியுடன் முட்டி மோதிப் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
சிங்கம் : “காட்டு ராஜா” என்று அழைக்கப்படும் சிங்கங்கள், பயங்கரமான தோற்றத்துடனும் கர்ஜனையுடனும் கூடிய மிகவும் ஆக்ரோஷமான வேட்டையாடிகள் என்பது அனைவரும் அறிந்ததே. இவை சிறிய குழுக்களாக இரையைப் பின்தொடர்ந்து, சுற்றி வளைத்துத் தாக்கி அழிக்க வல்லவை. காதல் உறவில் இருக்கும்போதோ அல்லது தங்கள் குட்டிகளுடன் இருக்கும்போதோ சிங்கங்களுக்கு மிக அருகில் செல்வது மனிதர்களுக்குப் பேராபத்தை விளைவிக்கும்.
கரடி : குழந்தைகளுக்கான புத்தகங்கள் அல்லது திரைப்படங்களில் நாம் பார்ப்பதற்கு மாறாக, கரடிகள் உண்மையில் அதிக வலிமைக்கும் வேகத்திற்கும் பெயர் பெற்றவை. இவை கோபப்பட்டால் அல்லது வேட்டையாட நினைத்தால், மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான விலங்குகளில் ஒன்றாக மாறும்.
காண்டாமிருகம் : பிரமாண்டமான அளவு, அபரிமிதமான உடல் வலிமை மற்றும் கூர்மையான ஒற்றைக் கொம்பு எனப் பார்ப்பதற்கே மிரட்டலாக இருக்கும் காண்டாமிருகங்கள் மிகவும் ஆபத்தானவை. குறிப்பாக, இவை திடுக்கிடும்போது அல்லது பயப்படும்போது தாக்குதல் நடத்தக்கூடிய அபாயம் அதிகம் உள்ளது.
முதலை : பதுங்கிப் பதுங்கி மெதுவாக ஊர்ந்து வரும், கரடுமுரடான தோற்றத்துடன் கூடிய முதலைகள் சக்திவாய்ந்த வேட்டை மிருகங்களாகும். வலிமையான மற்றும் பெரிய பற்களைக் கொண்ட இவை, பிற விலங்குகள் மற்றும் மனிதர்களைக் கடித்துக் குதறி, நீருக்குள் இழுத்துச் செல்லும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
சிறுத்தை : சிறுத்தைகள் அதிவேகம் மற்றும் சுறுசுறுப்புடன் இரைகளை வேட்டையாடும் திறன் கொண்டவை. இவை தங்களை விட மிகப் பெரிய இரையைக் கூடக் கொல்லும் வலிமை கொண்டவை.
ஓநாய் : ஓநாய்கள் தங்கள் இரையை வீழ்த்தவும் அழிக்கவும் குழுப்பணியைப் பயன்படுத்தும் வேட்டை மிருகங்கள். இவை நினைத்தால் அல்லது கூட்டமாகச் சேர்ந்தால், ‘காட்டு ராஜா’ என்று நாம் குறிப்பிடும் சிங்கத்தையே வீழ்த்தும் திறன் கொண்டவை.
உடும்பு : பெரிய சைஸ் பல்லி போலக் காட்சியளிக்கும் கொமோடோ டிராகன் எனப்படும் உடும்புகள், சராசரியாக 10 அடி நீளம் மற்றும் சுமார் 300 பவுண்டுகள் எடை கொண்டவை. கூர்மையான பற்களுடன், இவை கடித்தால் விஷமேறும் அபாயம் உள்ளது. இவை பதுங்கியிருந்து தாக்கும் கொடிய வேட்டையாடும் ஊர்வன வகையைச் சேர்ந்தவை.
நீர்யானை : நீர்யானைகள் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தான விலங்குகளாகக் கருதப்படுகின்றன. உலகிலேயே நிலத்தில் வசிக்கும் பாலூட்டிகளில் இவை மிகப்பெரிய ஒன்றாகும். இவை ஆக்ரோஷமாக இருக்கும்போதோ அல்லது தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நினைக்கும்போதோ மனிதர்களுக்கு மிக எளிதில் உயிராபத்தை விளைவிக்கக்கூடியவை.
Read More : நீங்கள் வாங்கும் கேஸ் சிலிண்டருக்கு மானியம் வரலையா..? இதோ ஒரே நிமிஷத்தில் சரிசெய்யலாம்..!!



