தென்கிழக்கு அலாஸ்காவின் எண்டிகாட் ஆர்ம் பகுதியில், ஹார்பர் தீவுக்கு அருகில் கடந்த 10 ஆம் தேதி அதிகாலையில், 10–15 அடி உயர அலைகள் எழுந்ததால், படகு சவாரி செய்த மக்களிடமிருந்து பூகம்ப மையத்திற்கு சுனாமி தகவல்கள் வந்தன. சாயர் தீவில் குறைந்தது 100 அடி உயர அலைகள் எழுந்ததாகவும் தேசிய பூங்கா சேவை தெரிவித்துள்ளது.
ஹார்பர் தீவில் முகாமிட்டிருந்த மூன்று படகோட்டிகள் தங்கள் பெரும்பாலான உபகரணங்களை இழந்து, பாதுகாப்பாக ஜூனோவுக்குத் திரும்பினர். படகோட்டிகளில் ஒருவரான நிக் ஹெய்ல்கீஸ்ட், “காட்டில் எங்கள் கூடாரத்திலிருந்து 1 அடி உயரத்தில் தண்ணீர் ஓடியதால் மிகுந்த அச்சமடைந்தோம் என்று கூறினார். ஜூனோவில் உள்ள தேசிய வானிலை சேவை அலுவலகம், உயிர்சேதங்கள் மற்றும் உள்கட்டமைப்பு பாதிப்புகள் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. தேசிய சுனாமி எச்சரிக்கை மையம், ஜூனோ அலை அளவீட்டில், சுமார் 60 மைல்கள் தொலைவில், அதிகபட்ச அலை 14 அங்குலம் (35 செ.மீ) என அறிவித்தது.
மேலும், ஆகஸ்ட் 10ம் தேதி காலை, அந்தப் பகுதியில் எந்த நிலநடுக்கமும் கண்டறியப்படவில்லை என்று பூகம்ப மையத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானிகளில் ஒருவரான எஸ்கி கரசோசென் கூறினார். மேலும், “எங்கள் ஆரம்ப மதிப்பீடு South Sawyer Glacier அருகே தான் இந்த நிலச்சரிவின் மூலக்காரணம் இருந்திருக்கலாம் என்பதைக் காட்டுகிறது. அதன் அளவு மிகவும் பெரியது – சுமார் 100 மில்லியன் கன மீட்டரை விட அதிகமாக இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
இந்த நிலச்சரிவின் உண்மையான அளவிலுள்ள சந்தேகம் இன்னும் இருக்கிறது. இந்த நிகழ்வை தரைமட்ட அளவில் உறுதிப்படுத்த (ground-truth) சில நாட்கள் எடுத்துக்கொள்ளும். இவை அதன் பரந்த பரிமாணத்துக்கான மிக விரைவான ஆரம்ப மதிப்பீடுகள் என்று காரஸோசென் கூறினார். “இந்த ஆரம்ப மதிப்பீடுகளின் நோக்கம், நிகழ்வின் அளவை ஒரு துரிதமான ‘ballpark’ அளவீட்டாக புரிந்து கொள்வதற்காக மட்டுமே. பல்வேறு ஆய்வுகளிலிருந்து மிகத் துல்லியமான அளவீடுகள் பின்னர் வரும். ஆனால் அதற்கு காலம் தேவைப்படும்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
2015 ஆம் ஆண்டு டான் ஃப்ஜோர்டுக்குப் பிறகு அலாஸ்காவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு மற்றும் சுனாமி இதுவாகும். அருகிலுள்ள நில அதிர்வு நிலையங்கள் மற்றும் 600 மைல்கள் (1,000 கிமீ) தொலைவில் உள்ள நிலையங்களால் நிலச்சரிவு சமிக்ஞை கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வு அறிவியல் ரீதியாக மிகவும் சுவாரஸ்யமானது. நிலச்சரிவுக்கு முன்னதாக 1-2 மணி நேர சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த முன்னோடி நிலநடுக்கங்களை முதலில் கண்டறிந்தவர் Western Washington பல்கலைக்கழக பேராசிரியர் ஜாக்கி காப்லன்-அவெர்பாக். இவர் முன்பு UAF-இல் (University of Alaska Fairbanks) ஒரு பிந்தைய ஆய்வாளர் (postdoc researcher) பதவியில் பணியாற்றியிருந்தார்.
நிலச்சரிவுக்கு முன்பாக சுமார் 18 மணிநேரத்திற்கு மேலாக நிலநடுக்க அழுத்தம் (precursors) மிகவும் தெளிவாகக் காணப்படுகின்றன. மேலும், இவை அதற்கு முன்னரே தொடங்கியிருக்க வாய்ப்பு உள்ளது. ஆய்வாளர்கள் சுமார் 100-க்கு மேற்பட்ட நிகழ்வுகளை ஆய்வு செய்துள்ளனர். இவை அனைத்தும் நிலச்சரிவு ஏற்பட்ட அதே பகுதியில் இருந்தே தோன்றியதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இடம், அளவு மற்றும் சாத்தியமான ஆபத்து மதிப்பீடுகளைச் செம்மைப்படுத்த அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், தேசிய சுனாமி எச்சரிக்கை மையம், அலாஸ்கா புவியியல் மற்றும் புவி இயற்பியல் ஆய்வுப் பிரிவு மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.