கூகுள் பே, ஃபோன்பே, பேடிஎம் போன்ற UPI செயலிகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் விதமாக, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. அக்டோபர் 8-ஆம் தேதியான இன்று முதல் இந்த மாற்றம் அனைத்து செயலிகளுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதியின்படி, இனி பணப் பரிமாற்றம் செய்யும்போது தற்போதுள்ள பின் நம்பர் மட்டுமின்றி, கைரேகை (Fingerprint) மற்றும் முக அங்கீகாரம் (Facial Recognition) போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரமும் சேர்க்கப்படவுள்ளது. ரிசர்வ் வங்கியின் (RBI) வழிகாட்டுதலின்படி, பணம் அனுப்புவதற்கான அங்கீகாரத்தில் இந்த புதிய பாதுகாப்பு இணைக்கப்படுகின்றன.
இந்த பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்குத் தேவையான தரவுகளைப் பெற, யுபிஐ பரிவர்த்தனைகளில் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் தரவுகளைப் பயன்படுத்த NPCI திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில், இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு ஒரு விருப்பத் தேர்வாக மட்டுமே இருக்கும் என்றும், தற்போதுள்ள பின் நம்பர் முறையும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதாவது, கைரேகை அல்லது முக அங்கீகாரம் ஒரு கூடுதல் சரிபார்ப்பாகச் செயல்பட்டு, ஒட்டுமொத்த யூ.பி.ஐ. பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும். இன்று மும்பையில் நடைபெறவுள்ள குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்டிவலில் (Global Fintech Festival) இந்த புதிய பயோமெட்ரிக் அங்கீகாரம் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அனைத்து யுபிஐ வாடிக்கையாளர்களுக்கும் இது படிப்படியாக அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கூகுள் பே, ஃபோன்பே போன்ற செயலிகள் புதிய அப்டேட்களை வெளியிட வேண்டியிருக்கும்.
இதற்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படும் இந்த பயோமெட்ரிக் நடைமுறையைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் 2-ஃபாக்டர் அங்கீகாரத்தை கட்டாயமாக்க உள்ளது. அதாவது, டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் செய்யும்போது, தற்போதுள்ள ஓ.டி.பி. அல்லது பின் நம்பர் போன்றவற்றுடன், கைரேகை, முக அங்கீகாரம், பாஸ்வேர்டு, பாஸ்பேர்ஸ் அல்லது வேறு ஏதேனும் ஒரு பாதுகாப்பு டோக்கன் எனப் பாதுகாப்பு அம்சங்களில் குறைந்தது இரண்டு அங்கீகாரங்கள் அவசியம் என்ற விதி நடைமுறைக்கு வரவுள்ளது. இந்த அதிரடி மாற்றங்கள், இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் செய்யும் வாடிக்கையாளர்களின் பணப் பரிமாற்றத்தை முன்பு இருந்ததை விட பல மடங்கு பாதுகாப்பானதாக மாற்றும் என்று நிதி வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Read More : சென்னை நட்சத்திர ஓட்டலில் அரைகுறை ஆடையுடன் நடனம்..!! போதையில் தள்ளாடிய இசையமைப்பாளர் மகள்..!!