எம்.ஜி.ஆர் – சரோஜா தேவியை பார்க்க ஒருமுறை 10,000க்கும் மேற்பட்டோர் குவிந்த சம்பவம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி வயது முதிர்வால் நேற்று காலமானார்.. அவரின் மறைவு செய்தி ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. திரைப் பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சரோஜா தேவியின் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்..
சரோஜா தேவி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களும் வெளியான வண்ணம் உள்ளன. அந்த வகையில் எம்.ஜி.ஆர் – சரோஜா தேவியை பார்க்க ஒருமுறை 10,000க்கும் மேற்பட்டோர் குவிந்த சம்பவம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
எம்.ஜி.ஆர் – சரோஜா தேவி நடிப்பில் வெளியான அன்பே வா படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற ராஜாவின் பார்வை பாடல் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் படமாக்கப்பட்டது. இந்தப் பாடலின் படப்பிடிப்பைக் காண 10,000 க்கும் மேற்பட்டோர் அங்கு கூடினர்.
‘மிஸ்டி மெமாயர்ஸ்’ என்ற தனது புத்தகத்தில், டி. தியாகராஜன் இதுபற்றி குறிப்பிட்டுள்ளார். “ ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ படப்பிடிப்பின் போது, 10,000-க்கும் மேற்பட்டோர் படப்பிடிப்பு தளத்தில் குவிந்தனர். எந்த திரைப்பட படப்பிடிப்புக்கும் இவ்வளவு பெரிய கூட்டத்தை நான் பார்த்ததில்லை.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தில் இருந்த தர்மலிங்கம் வேணுகோபால் கூறுகையில், “ஊட்டியில் படமாக்கப்பட்ட மறக்க முடியாத படங்களில், ‘அன்பே வா’ உள்ளூர் மக்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை அளித்தது. அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலிய தோட்டத்தில், ஒரு பிரமாண்டமான தேர், செயற்கை மூடுபனி மற்றும் அரச உடைகள் கொண்ட பிரபலமான பாடலான ‘ராஜாவின் பார்வை’ படப்பிடிப்பு நடந்தது. இது உள்ளூர் பார்வையாளர்களுக்கு ஒரு அசாதாரண அனுபவமாக இருந்தது.” என்று தெரிவித்தார்.
எம்ஜிஆர், சிவாஜி கணேசன் மற்றும் என்டிஆர் போன்ற ஜாம்பவான்கள் நடித்த படங்களுக்காக சரோஜா தேவி அடிக்கடி ஊட்டிக்குச் சென்றார்.
ஆர் ஏ தாஸ் என்ற மூத்த சினிமா விமர்சகர் இதுகுறித்து பேசிய போது “1964 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் மற்றும் சரோஜா தேவி நடித்த ‘புதிய பறவை என்ற கிளாசிக் படத்தின் ‘சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து’ பாடல், ஊட்டிக்கு அருகில் உள்ள ஒரு பழங்குடியின குக்கிராமத்தில் படமாக்கப்பட்டது. பாடலைப் பாடும்போது சரோஜா தேவி சாய்ந்த மரம் இன்றும் உள்ளது.” என்று தெரிவித்தார்..