ஜெய்ப்பூரின் ஹர்மாடா பகுதியில் உள்ள லோஹா மண்டி அருகே இன்று பயங்கர விபத்து ஏற்பட்டது.. ஒரு அதிவேக டிப்பர் லாரி 17 வாகனங்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 11 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.. 10 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. காயமடைந்தவர்களில் 3 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது இந்த மூவரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது..
காலியாக இருந்த டிப்பர் லாரி லோஹா மண்டி பெட்ரோல் பங்க் அருகே சாலை எண் 14 நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது.. அந்த லாரி ஓட்டுநர் மதுபோதையில் இந்த விபத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது.. இதனால், அந்த லாரி சாலையில் நின்றிந்த வாகனங்களை இடித்து தள்ளி, 300 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது.. பல கார்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பாதசாரிகள் இந்த விபத்தில் சிக்கினர். காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து ஏற்பட்ட பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக மாற்றப்பட்டது.
முதல்வர் பஜன் லால் ஷர்மா ஆறுதல்
ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் ஷர்மா இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர், அமைச்சர் ஜாவர் சிங் காரா மற்றும் கே.கே. பிஷ்னோயை கன்வாடியா மருத்துவமனைக்கும், அமைச்சர் சுரேஷ் ராவத் மற்றும் சுமித் கோதாராவை எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கும் அனுப்பி நிவாரண பணிகளை மேற்பார்வையிட அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், “நான் நேரடியாக நிலைமையை கண்காணித்து வருகிறேன். மாவட்ட ஆட்சியரும் மருத்துவமனை அதிகாரிகளும் மருத்துவ சேவையில் எந்த குறையும் ஏற்படாதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என முதல்வர் தெரிவித்தார்.
தனது எக்ஸ் பதிவில் “ஜெய்ப்பூரின் ஹர்மாடா லோஹா மண்டி பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் பலர் உயிரிழந்தது மிகுந்த துயரமும் வேதனையும் அளிக்கிறது. காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தோரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்; துயர் மிகுந்த குடும்பங்களுக்கு வலிமை அளிக்கவும் வேண்டுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்..
முன்னாள் முதல்வர் அசோக் கெஹ்லோட் இதுகுறித்து தனது இரங்கலைத் தெரிவித்தார். முதல்வர் தனது பதிவில் “ஜெய்ப்பூர் ஹர்மாடாவில் நிகழ்ந்த இந்த கொடூரமான சாலை விபத்தில் பல உயிர்கள் இழந்ததாக அறிந்து மிகுந்த துயரமடைந்தேன். இறந்தோரின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், குடும்பங்களுக்கு இந்த கடினமான நேரத்தில் தைரியம் அளிக்கவும் இறைவனை வேண்டுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்..
Read More : பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு ஏன் சுங்க வரி வசூலிப்பதில்லை..? அதன் பின்னால் உள்ள காரணம் தெரியுமா..?



