உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 11-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த அந்த மாணவி நேற்று முன்தினம் மதியம் சுமார் 12 மணியளவில் தனது உறவினர் ஒருவரைச் சந்திக்க தனியாக வெளியே சென்றுள்ளார்.
பின்னர் இரவு வேளையில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, இருவரும் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி அருகில் இருந்த தோப்பில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஐந்து நபர்கள் கொண்ட கும்பல் ஒன்று திடீரென அந்த இடத்திற்கு வந்துள்ளது.
அந்த கும்பல் உடனடியாக மாணவியின் நண்பரை கொடூரமாக தாக்கியதுடன், அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக விரட்டி அனுப்பியது. பின்னர், தனியாக நின்ற மாணவியை வலுக்கட்டாயமாக தோப்புக்குள் இழுத்துச் சென்று, 5 பேரும் மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதனால், அதிர்ச்சியில் உறைந்த மாணவி, பின்னர் இந்தத் துயரச் சம்பவத்தை தனது மற்றொரு உறவுக்கார நண்பரிடம் கூறியதை அடுத்து, காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய பந்தாரா காவல் நிலைய அதிகாரி ராணா ராஜேஷ் குமார், “பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் குற்றவாளிகள் அனைவரும் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யச் சிறப்புக் காவல் படையணிகள் அமைக்கப்பட்டு, அவர்கள் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.