சினிமா உலகில் பல திறமையான கலைஞர்கள், உச்சத்தை தொடுவதற்கு முன்பே காற்றில் கரைந்துவிடுகின்றனர். ஆனால், அவர்களின் தாக்கம் மட்டும் ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும். அந்த வகையில், ஒரே ஆண்டில் 12 திரைப்படங்களில் நடித்த ஒரு இளம் நடிகையின் சாதனை இன்றும் மறக்க முடியாது.
அந்த கால கட்டத்தில் முன்னணி நடிகைகளான ஸ்ரீதேவி, மாதுரி தீக்ஷித் ஆகியோரால் கூட இத்தகைய வேகமான வளர்ச்சியை அடைய முடியவில்லை. மாதம் ஒரு படம் என்ற அளவில் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டது அவரது அர்ப்பணிப்பையும், திறமையையும் காட்டுகிறது. துரதிருஷ்டவசமாக, அவர் வாழ்ந்த காலம் மிக குறுகியது. 19 வயதிலேயே அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தார்.
அந்த நடிகை தான் திவ்ய பாரதி. வெறும் 14 வயதில் மாடலிங் வாழ்க்கையைத் தொடங்கிய இவர், அந்த உலகில் பெற்ற புகழின் பலனாக சினிமா வாய்ப்புகளைப் பெற்றார். அந்த வாய்ப்புகளைத் தவறவிடாமல் தனது திறமையால் பிடித்துக்கொண்டார். மாடலிங்கில் பெற்ற அனுபவம் வெள்ளித்திரையிலும் அவருக்கு கை கொடுத்தது.
அதன் மூலம் திரையுலகில் தனது தனி திறமையுடன் நுழைந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஒரே ஆண்டில் 12 திரைப்படங்களில் நடித்தவர் என்ற பெருமையையும் பெற்றார். 1990-ம் ஆண்டு தமிழில் வெளியான நிலா பெண்ணே படம் மூலம் அவர் சினிமா உலகில் முதன்முறையாக அறிமுகமானார். பின்னர், தெலுங்கில் பாபிலி ராஜா படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தனது வெகுநாள் கனவான ஹிந்தி திரையுலகும் அவரின் வருகையை வரவேற்றது. 1992இல் விஸ்வாத்மா திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, ஒரு வருடத்துக்குள் தொடர்ச்சியான வெற்றிப்படங்களில் நடித்தார். அவர் ஷாருக்கானுடன் நடித்த திவானா திரைப்படம், இன்று வரை பாலிவுட் ரசிகர்களிடையே ‘க்ளாசிக்’ படமாகக் கருதப்படுகிறது.
திரையுலகில் கொடி கட்டி பறந்த திவ்யா, துரதிருஷ்டவசமாக 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி, அவரது மும்பையில் உள்ள வீட்டின் பால்கனியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். இதைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அந்த மரணம் தொடர்பாக பல சந்தேகங்கள், வதந்திகள் எழுந்தன. ஆனால் இன்று வரை அது ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது. சிறிது காலத்தில் சாதனை புரிந்த ஒரு இளம் நடிகையின் மரணம் என்பது சினிமா உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகவே பார்க்கப்பட்டது.
திவ்யா பாரதி இன்று உயிருடன் இருந்திருந்தால், எந்த உயரத்தை எட்டியிருப்பார் என்பதைப் பற்றி பேசும் ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவரது உயிரிழந்து 32 ஆண்டுகள் கடந்திருந்தாலும், அவரின் நினைவுகள் ரசிகர்களிடம் இருந்து குறைந்ததே இல்லை.