மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி ஒன்றில் உணவு விஷம் காரணமாக சுமார் 125 பேர் நோய்வாய்ப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கல்யாண் நகரில் உள்ள கடக்பாடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு குடியிருப்பு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ‘ஹல்தி’ விழா நடைபெற்றது.. அங்கு விருந்தினர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.
இந்த விழாவில் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்று அசௌகரியம் இருப்பதாகப் பலரும் புகார் செய்தனர். இதையடுத்து, அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு மருத்துவ உதவிக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
துணை காவல் ஆணையர் (கல்யாண் மண்டலம்-III) அதுல் செண்டே இதுகுறித்து பேசிய போது “விழாவின் போது சுமார் 100 முதல் 125 பேர் உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அனைவரும் வீடு திரும்பியுள்ளனர்,” என்று தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார். உணவு வழங்கிய கேட்டரிங் நிறுவனம் அகமதாபாத்தைச் சேர்ந்தது என்றும், விசாரணைக்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கடக்பாடா காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
Read More : தினசரிப் பொருட்களில் உள்ள நச்சுக்கள்: ஷாம்பு முதல் வாசனைத் திரவியம் வரை..! வீட்டில் உள்ள சைலண்ட் விஷங்கள்!



