புதுக்கோட்டை மாவட்டம் தெய்வீக வரலாறுகளால் நிறைந்த நிலம். அந்த வரலாற்றுச் சிறப்பைத் தாங்கிய இடமே தேவர்மலை. புதுக்கோட்டையிலிருந்து சுமார் 28 கிலோமீட்டர் தூரத்தில், பேரையூர் விளக்கில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், இயற்கையின் மடியில் திகழ்கிறது இந்த அதிசயமான சிவன் குடைவரைக் கோவில்.
இக்கோவிலின் தோற்றம் சாதாரணமல்ல. 63 நாயன்மார்களில் ஒருவரான பெருமிழலைக் குரும்ப நாயனார், தீவிர சிவபக்தராக தமது தவவலியால் இம்மலையைத் துளைத்து, இந்தக் கோவிலை உருவாக்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாது, அவர் தமது இறுதி தரணை வாழ்க்கையை இக்கோவிலிலேயே முடித்து ஜீவசமாதி அடைந்ததாகவும் மக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.
இந்த புனித நிலம், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத சித்திரை நட்சத்திரம் நாளில் பெரும் திருவிழாவாக மாறுகிறது. பெருமிழலைக் குரும்ப நாயனாரின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், ஊர்மக்கள் அன்னதானம் செய்து பக்திப் பரவசத்தில் திரள்கின்றனர்.
தேவர்மலைக் கோவிலின் சிறப்புகளில் ஒன்று இரண்டு நந்திகள் சுவாமி முன் அமைந்திருப்பது. மேலும், இங்கு சிவனின் கருவறை மலையின் பாறையை நேரடியாகக் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது கலை நயமும், பக்தியும் கலந்த ஒரு அற்புதச் சான்று.
மலையின் உச்சியில் உள்ள இயற்கைச் சுனை, ஆண்டு முழுவதும் தண்ணீரை தாங்கி நிற்கிறது. அந்தத் தண்ணீரே சுவாமிக்கும் பெருமிழலைக் குரும்ப நாயனாருக்கும் அபிஷேகம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. இதுவே தேவர்மலையின் தெய்வீக அடையாளம்.
பாறைகளின் மடியில் அமைந்துள்ள இந்தக் குடைவரைக் கோவில், தமிழர் ஆன்மிக வரலாற்றின் ஒரு உயிர்மூச்சு. பக்தியும் பக்தரின் அர்ப்பணிப்பும் இணைந்தால் மலையையும் துளைத்து தெய்வ சன்னதி உருவாகும் என்பதற்கு தேவர்மலை ஒரு உயிரோட்டமான எடுத்துக்காட்டு.
Read more: இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை தடுக்க ஆப்கானிஸ்தான் நடவடிக்கை!



