கிரேக்கக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான ஒரு கப்பலும், அகதிகளை ஏற்றிச் சென்ற ஒரு படகும் ஏஜியன் கடலில் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. துருக்கிக்கு அருகிலுள்ள சியோஸ் தீவுக்கு அப்பால் நடந்த இந்த மோதல் நடந்துள்ளது.. எனினும் இந்த விபத்து குறித்த விவரங்களை கிரேக்க அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. இந்த விபத்தில் ஒரு “துறைமுகக் காவல் ரோந்துக் கப்பலும்” ஒரு “அதிவேக” சிறிய படகும் சம்பந்தப்பட்டிருந்தன என்று கடலோரக் காவல்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடலோரக் காவல்படையைச் சேர்ந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், 24 அகதிகள் மீட்கப்பட்டதாகவும் கடலோரக் காவல்படை கூறியது. காயமடைந்தவர்களில் 7 குழந்தைகளும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அடங்குவதாக கிரேக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அகதிகள் படகைக் கண்ட பிறகு ரோந்துக் கப்பல் எச்சரிக்கை சமிக்ஞை கொடுத்ததாகவும், ஆனால் அந்தப் படகு தப்பிச் செல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது.. உயிர்பிழைத்தவர்களைத் தேடும் பணியில் கிரேக்க விமானப்படையின் ஹெலிகாப்டர் ஒன்று ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான அகதிகள் ஐரோப்பாவை அடைய மத்தியதரைக் கடலைக் கடக்க முயற்சிக்கின்றனர். மத்தியதரைக் கடல் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கக் கடற்கரைக்கு அப்பால் உள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் ஐரோப்பாவிற்கான புலம்பெயர்வுப் பாதைகளில் 2025-ஆம் ஆண்டில் 1,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர் என்று ஐ.நா அகதிகள் நிறுவனம் நவம்பர் மாதம் தெரிவித்தது.
2014-ஆம் ஆண்டு முதல் மத்தியதரைக் கடலில் சுமார் 33,000 அகதிகள் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
Read More : லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாஃபியின் மகன் மர்ம கும்பலால் சுட்டுக் கொலை..!



