உத்தரகண்ட்டில் போதைக்கு அடிமையான 17 வயது சிறுமி, பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டு 19 ஆண்களுக்கு எச் ஐ வி வைரஸ் தொற்றை பரப்பியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் மிகவும் கொடிய தொற்று பாதிப்பு எச்ஐவிதான். இதற்கு இப்போதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழப்பதை தடுக்க முடியாமல் போய்விடுகிறது. இருப்பினும் மருந்துகளை சரியாக எடுத்துக் கொண்டால், நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ முடியும் என்கிறது மருத்துவ உலகம். இருப்பினும், எச்ஐவி உடன் வாழ்வது என்பது, மிகப்பெரிய போராட்டம்தான்.
இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரகாண்ட் மாநிலத்தில், போதைக்கு அடிமையான சிறுமியை மிரட்டி உல்லாசமாக இருந்த 19 இளைஞர்கள் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நானிடால் மாவட்டத்தில் ராம் நகர் எனும் பகுதியில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. இங்குள்ள 17 வயது சிறுமி ஒருவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருந்திருக்கிறார். இப்படி இருக்கையில் சிறுமியுடன் பழகிய இளைஞர்கள் சிலர், போதை பொருள் வேண்டும் என்றால் தன்னுடன் நெருக்கமாக பழக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளனர். இப்படியாக சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்.
இதையடுத்து சில நாட்களில் அந்த இளைஞர்களுக்கு உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சோதனை செய்ததில் இளைஞர்கள் எச்ஐவி தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்திருக்கிறது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் சிறுமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதுமட்டுமல்லாமல் இவர்களது மனைவிகளுக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
இந்தநிலையில், இதுதொடர்பான சில விவரங்களைக் கொண்ட பதிவு ஒன்று புதன்கிழமை எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டதையடுத்து மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதில், போதைப்பொருளுக்கு அடிமையான சிறுமி, ஹெராயின் போதைக்கு அடிமையாகி, நிதி ரீதியாக பலவீனமான குடும்பத்தைச் சேர்ந்தவள். தனது போதைப் பழக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள, பணத்திற்காக பல ஆண்களுடன் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
சிறுமிக்கு எச்.ஐ.வி இருப்பது குறித்து அறிந்திருக்கவில்லை என்றும், அவளுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டதாகவும் கூறப்படுகிறது, இது மேலும் பரவுவதற்கு வழிவகுத்தது. அந்த சிறுமி ஒரு மைனர் என்பதால், அவளது சம்மதம் எதுவாக இருந்தாலும், அவளுடன் உடலுறவு கொள்வது குற்றமாகும். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ், மைனர் சிறுமியுடன் பாலியல் செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்பூர்வ கற்பழிப்புக்காக வழக்குத் தொடரப்படலாம்.
இந்த சம்பவம், இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கம், எச்.ஐ.வி மற்றும் அதன் பரவல் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை குறித்து எச்சரிக்கையை எழுப்பியுள்ளது. நமது நாட்டில் சுகாதார அதிகாரிகள் விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்த வேண்டும், வழக்கமான பரிசோதனைகளை ஊக்குவிக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களுக்கு மறுவாழ்வு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Readmore: பெங்களூருவின் பழைய பெயர் என்ன?. இப்படியொரு வரலாறு இருக்கா?. தெரிஞ்சுக்கோங்க!