ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்த ஷேக் அம்ஜத் என்பவர், குடும்ப பிரச்சனையால் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற தன்னுடைய மனைவியை சமாதானம் செய்வதற்காக 175 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலசோர் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு சென்று மனைவியைச் சந்தித்தபோது, இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த அம்ஜத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பொதுமக்கள் முன்னிலையிலேயே தனது மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, உடனடியாக அம்ஜத்தைப் பிடித்த பொதுமக்கள், போலீசுக்கு தகவல் கொடுத்து, பின்னர் அவர்கள் வந்ததும் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.